
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி நாளை அகமதாபாத்தில் தொடங்குகிறது. ஆஸ்திரேலிய அணி தொடரை சமன் செய்ய கடைசி போட்டியில் வெற்றி பெற வேண்டும். இந்திய அணியை பொறுத்தவரை தொடரை வென்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற வேண்டும். இதனால் இந்த போட்டி மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் ஆடுகளம் எவ்வாறு அமைக்கப்பட்டு இருக்கிறது என்பதை காண கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்மித், “இந்தத் தொடரில் அமைக்கப்பட்டுள்ள நான்கு ஆடுகளங்களை நான் பார்த்ததிலே இது ஒன்றுதான் ரன் குவிப்புக்கு சாதகமாக இருப்பது போல் தெரிகிறது. தற்போது இங்கு வெயில் 38 டிகிரி வரை சுட்டு எரிக்கிறது. இதனால் போட்டி செல்ல செல்ல ஆடுகளம் மிகவும் வறண்ட நிலையில் காணப்படும் என நினைக்கிறேன். மைதான ஊழியர் ஒருவர் என்னிடம் சொன்னார். ஆடுகளத்தில் மீண்டும் தண்ணீரை ஊற்ற வாய்ப்பு இருப்பதாக கூறினார்.
எனவே நான் கொஞ்சம் காத்திருந்து அதன் பிறகு கணிக்கலாம் என முடிவு எடுத்துள்ளேன். ஆனால் முதல் நாளில் பந்து பெரிய அளவில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று நினைக்கிறேன். எங்களுக்கு முன் என்ன இருக்கிறதோ அதை பொறுத்து தான் நாம் விளையாட வேண்டும். நாங்கள் இந்த தொடர் முழுவதும் பெரிய இலக்கை எட்டவே இல்லை. இந்தியா மட்டும் முதல் டெஸ்டில் ரோஹித் சர்மா அடித்த சதத்தால் 400 ரன்கள் எட்டியது. மேலும் 400 ரன்கள் அடித்தால் அது அணியின் வெற்றிக்கு உதவும் என்பதை நாம் முன்பே பார்த்து விட்டோம்.