
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அங்கு 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. கடந்த 2012க்குப்பின் உலகின் எந்த அணிக்கு எதிராகவும் தங்களுடைய சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் கூட தோற்காமல் இருந்து வரும் இந்தியா இம்முறையும் இங்கிலாந்தை தோற்கடித்து வெற்றி வாகை சூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் பென் ஸ்டோக்ஸ் – பிரெண்டன் மெக்கல்லம் தலைமையில் டெஸ்ட் போட்டிகளில் டி20 போல அதிரடியாக விளையாடி வரும் இங்கிலாந்து கடந்த 2 வருடங்களில் தொடர்ச்சியாக நிறைய வெற்றிகளை குவித்து வருகிறது. எனவே அதே போல இத்தொடரில் அதிரடியாக விளையாடி இந்தியாவை 2012க்குப்பின் அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து கோப்பையை வெல்லும் முனைப்புடன் இங்கிலாந்து விளையாட உள்ளது.
இந்நிலையில் இதற்கு முன் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போதெல்லாம் இங்கிலாந்து சாதாரண டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடியதாக ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறியுள்ளார். ஆனால் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டை அதிரடியாக விளையாடுவதால் இம்முறை இந்தியாவில் விளையாடுவது தமக்கு புதிய ஆர்வத்தையும் வெறித்தனத்தையும் கொடுப்பதாக ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.