இந்த அணிகளே இறுதிப்போட்டிக்கு வர அதிக வாய்ப்புள்ளது - மிஸ்பா உல் ஹக் கணிப்பு!
நடப்பு டி20 உலகக்கோப்பை தொடருக்கான இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் மிஸ்பா உல் ஹக் கணித்துள்ளார்.
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் ஜூன் மாதம் முதல் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் கோலாகலமாக தொடங்கவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைக்கும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
இதனைத்தொடர்ந்து இத்தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் பயிற்சி ஆட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் எந்த நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும், எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற கணிப்புகளை முன்னாள் வீரர்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடும் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மிஸ்பா உல் ஹக் கருத்து தெரிவித்துள்ளார்.
Trending
இதுகுறித்து பேசியுள்ள அவர், “உலகக்கோப்பை போன்ற தொடரில் ஆஸ்திரேலியாவை தேர்வு செய்வது எப்போதும் ஒரு பாதுகாப்பான தேர்வாக இருக்கும் என நினைக்கிறேன். ஏனெனில் அழுத்தமான போட்டிகளில் எப்படி வெற்றிபெற வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும். அது எப்படியான சூழலாக இருந்தாலும் சரி. மேலும் ஒரே ஒரு சுழற்பந்துவீச்சாளரை மட்டுமே பயன்படுத்து ஆசியாவில் அவர்கள் வெற்றியைப் பதிவுசெய்துள்ளனர்.
அதனால் எந்த உலகக் கோப்பையிலிருந்தும் ஆஸ்திரேலியாவை விலக்கிவிட முடியாது. அதேசமயம் இரண்டாவது அணியை கணிப்பது தான் மிகவும் கடினமான ஒன்று. அதனால் அந்த இடத்தை நான் பாகிஸ்தான் அணிக்கு வழங்குகிறேன். அதேசமயம் இந்திய அணியையும் குறைத்து மதிப்பிட முடியாது. ஏனெனில் இந்திய அணியும் மிகவும் வலிமையான அணி தான். அதனால் பாகிஸ்தான், இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளில் இரு அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்” என்று தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அணி: பாபர் அசாம் (கே), சைம் அயூப், முகமது ரிஸ்வான், ஆசம் கான், ஷதாப் கான், ஃபகர் ஸமான், உஸ்மான் கான், இஃப்திகார் அகமது, இமாத் வாசிம், அப்ரார் அகமது, முகமது அப்பாஸ் அஃப்ரிடி, முகமது அமீர், நசீம் ஷா, ஷாஹீன் ஷா அஃப்ரிடி, ஹரீஸ் ராவுஃப்.
Win Big, Make Your Cricket Tales Now