
உலக கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிப்பதற்காக இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப் போட்டியில் இந்தியாவை தோற்கடித்த ஆஸ்திரேலியா கோப்பையை வென்றது. குறிப்பாக ஆரம்பத்திலேயே அடுத்தடுத்த தோல்விகளால் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் திண்டாடிய அந்த அணி அதன் பின் தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்று செமி ஃபைனலில் தென்னாப்பிரிக்காவை தோற்கடித்தது.
அதைத்தொடர்ந்து நடைபெற்ற ஃபைனலில் தொடர்ந்து 10 வெற்றிகளை பெற்று உச்சகட்ட ஃபார்மில் எதிரணிகளை பந்தாடிய ரோகித் சர்மா தலைமையிலான இந்தியாவை 240 ரன்களுக்கு சுருட்டிய ஆஸ்திரேலியா 6வது கோப்பையை வென்று உலகின் புதிய சாம்பியனாக சாதனை படைத்தது. ஆனால் அதற்காக கொடுக்கப்பட்ட வெற்றிக்கோப்பை மீது நட்சத்திர ஆஸ்திரேலிய வீரர் மிட்சேல் மார்ஷ் கால் மீது கால் போட்டு கொண்டாடியது மிகப்பெரிய சர்ச்சையாக மாறியது.
குறிப்பாக முழு திறமையை வெளிப்படுத்தி கடினமாக போராடிய உழைப்பிற்கு கிடைத்த பரிசு மீது இப்படியா காலை போடுவீர்கள் என்று நிறைய ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். அதிலும் குறிப்பாக தலை மீது வைத்து கொண்டாட வேண்டிய கோப்பையின் மீது நீங்கள் கால் போட்டது எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கவில்லை என இந்திய வீரர் முகமது ஷமி அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார்.