
நியூசிலாந்து அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் படுதோல்வியைச் சந்தித்திருந்தது. இதையடுத்து அந்த அணி சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் அக்டோபர் 18ஆம் தேதி முதலும், ஒருநாள் தொடர் அக்டோபர் 26ஆம் தேதி முதலும் நடைபெற இருக்கிறது.
மேலும் இத்தொடரில் பங்கேற்கும் இங்கிலாந்து அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் நியூசிலாந்து ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான இங்கிலாந்து அணியின் கேப்டனாக ஹாரி புரூக் தொடர்கிறார். மேற்கொண்டு ஜோஸ் பட்லர், ஜோஃப்ரா ஆர்ச்சர், சாம் கரண், பென் டக்கெட், ஜேமி ஸ்மித் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.
இந்நிலையில் இங்கிலாந்து டி20 தொடருக்கான நியூசிலாந்து அணியும் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காயம் காரணமாக ஆஸ்திரேலிய டி20 தொடரில் இருந்து விலகிய மிட்செல் சாண்ட்னர் மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளதுடன், கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இதுதவிர காயத்தால் ஆஸ்திரேலிய தொடரின் பாதியிலேயே வெளியேறிய ரச்சின் ரவீந்திராவுக்கும் இந்த அணியில் இடம் கிடைத்துள்ளது.