
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது.
அதன்படி இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் சோபிக்க தவறிய நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் - அக்ஸர் படேல் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அக்ஸர் படேல் 42 ரன்களையும், ஸ்ரேயாஸ் ஐயர் 79 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழக்க, இறுதியில் ஹர்திக் பாண்டியா அதிரடியாக விளையாடி 45 ரன்களையும் சேர்த்தனர்.
இதன்மூலம் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 249 ரன்களைச் சேர்த்தது. நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணியில் கேன் வில்லியம்சன் அரைசதம் கடந்ததுடன் 81 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழக்க, அந்த அணியின் மற்ற வீரர்கள் யாரும் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க தவறினர்.