
ஆஸ்திரேலிய - இந்திய அணிகளுக்கு இடையேயான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள இரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ளன.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 14ஆம் தேதி பிரிஸ்பேனில் உள்ள காபா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி தொடரில் முன்னிலைப் பெறும் என்பதால், இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் சிறப்பு மைல் கல் ஒன்றை எட்டும் வாய்ப்பினைப் பெற்றுள்ளார்.
அதன்படி, இந்தப் போட்டியில் மிட்செல் ஸ்டார்க் 8 விக்கெட்டுகளை வீழ்த்தினால், சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்காக 700 விக்கெட்டுகளை அவர் பூர்த்தி செய்வார். இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணிக்காக இந்த சாதனையை படைக்கும் நான்காவது வீரர் என்ற பெருமையையும் அவர் பெறுவார். மிட்செல் ஸ்டார்க் இதுவரை 283 போட்டிகளில் விளையாடி 366 இன்னிங்ஸ்களில் 692 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.