
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி 5 போட்டிகளை உள்ளடக்கிய பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று இந்த டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது பகலிரவு ஆட்டமாக அடிலெய்டில் இன்று (டிசம்பர் 06) தொடக்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து ஆஸ்திரேலிய அணியை பந்துவீச அழைத்தார். இன்றைய போட்டிகான இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா, ஷுப்மன் கில் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் அகியோர் சேர்க்கப்பட்டனர். இதையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கேஎல் ராகுல் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட யஷஸ்வி ஜெஸ்வால் எதிர்கொண்ட முதல் பந்திலேயே மிட்செல் ஸ்டார்க்கிடம் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
பின்னர் ஜோடி சேர்ந்த கேஎல் ராகுல் - ஷுப்மன் கில் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்து முயற்சியில் இறங்கினர். இதில், இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 69 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். பின் இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேஎல் ராகுல் 37 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலியும் 7 ரன்களை மட்டுமே சேர்த்திருந்த நிலையில் மிட்செல் ஸ்டார்க்கின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து பெவிலியானுக்கு திரும்பினார்.