
அமெரிக்காவில் நடைபெற்று வரும் இரண்டாவது சீசன் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 15ஆவது லீக் போட்டியில் சியாட்டில் ஆர்காஸ் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற நைட் ரைடர்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய சியாட்டில் ஆர்காஸ் அணிக்கு தொடக்க வீரர் ரியான் ரிக்கெல்டன் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அசத்த, மறுபக்கம் ஜெயசூர்யா 2 ரன்களுக்கும், குயின்டன் டி காக் ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டை இழந்தனர்.
ஆனாலும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரியான் ரிக்கெல்டன் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். ஆனால் அதேசமயம் மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹென்ரிச் கிளாசென் 23 ரன்களில் விக்கெட்டை இழக்க, அட்டுத்து களமிறங்கிய ஆரோன் ஜோன்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல் ஆகியோரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதேசமயம் இப்போட்டியில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரியான் ரிக்கெல்டன் 7 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 89 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
இதன்காரணமாக சியாட்டில் ஆர்காஸ் அணியானது 6 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்களைச் சேர்த்தது. நைட் ரைடர்ஸ் அணி தரப்பில் ஸ்பென்ஸர் ஜான்சன், ஆண்ட்ரே ரஸல், கோர்ன் டிரை, சுனில் நரைன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய நைட் ரைடர்ஸ் அணியில் கேப்டன் சுனில் நரைன் 8 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். பின்னர் இணைந்த ஜேசன் ராய் - உன்முக்த் சந்த் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் ஜேசன் ராய் 27 ரன்களில் ஆட்டமிழந்தார்.