மேஜர் லீக் கிரிக்கெட் 2025: சான் ஃபிரான்ஸிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ஃபாஃப் டூ பிளெசிஸ் சதமடித்ததன் மூலம் டி20 கிரிக்கெட்டில் தனித்துவ சாதனையைப் படைத்துள்ளார்.
எம்எல்சி தொடரில் இன்று நடைபெற்ற 10ஆவது லீக் போட்டியில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் மற்றும் சான் ஃபிரான்ஸிகோ யூனிகார்ன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சூப்பர் கிங்ஸ் அணி 198 ரன்களைச் சேர்த்த நிலையில், பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய யூனிகார்ன்ஸ் அணி 16.1 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
இந்நிலையில் சான் ஃபிரான்ஸிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிக்கு எதிராக போட்டியில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனும் அதிரடி பேட்ஸ்மேனுமான ஃபாஃப் டு பிளெசிஸ் சதம் அடித்து வரலாறு படைத்தார். இப்போட்டியில் டூ பிளெசிஸ் 51 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்சர்களுடன் 100 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் ஆடவர் டி20 கிரிக்கெட்டில் சதம் அடித்த மூன்றாவது வயதான வீரர் என்ற பெருமையை பிளெசிஸ் பெற்றுள்ளார்.