
எம்எல்சி 2025: சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிக்கு எதிரான தங்களது கடைசி லீக் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணியானது ஆறுதல் வெற்றியையும் பதிவுசெய்துள்ளது.
நடப்பு சீசன் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் மற்றும் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த நைட் ரைடர்ஸ் அணிக்கு ஆண்ட்ரே ஃபிளெட்சர் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் இணை அதிரடியான தொடக்கததைக் கொடுத்தனர். இதில் அதிரடியாக விளையாடி வந்த அலெக்ஸ் ஹேல்ஸ் அரைசதம் கடந்த அசத்திய நிலையில் 8 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 58 ரன்களைச் சேர்த்த கையோடு விக்கெட்டை இழந்தார். அதேசமயம் இப்போட்டிக்கு இடையே மழை பெய்ததன் காரணமாக ஆட்டம் 19 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
பின்னர் ஆண்ட்ரே ஃபிளெட்சருடன் ஜோடி சேர்ந்த ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் உயர்ந்தது. அதன்பின் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 49 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழக்க, மறுமுனையில் சதமடித்து அசத்திய ஆண்ட்ரே ஃபிளெட்சர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 10 பவுண்டரி, 8 சிக்ஸர்களுடன் 118 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் நைட் ரைடர்ஸ் அணி 19 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 243 ரன்களைக் குவித்தது. யூனிகார்ன்ஸ் தரப்பில் பார்ட்லெட், ஹசன் கான் மற்றும் கரிமா கோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.