MLC 2025: மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணி வெற்றிபெற்றதுடன், நடப்பு சீசனில் ஹாட்ரிக் வெற்றியையும் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 6ஆவது லீக் ஆட்டத்தில் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் மற்றும் எம்ஐ நியூயார்க் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த நியூயார்க் அணிக்கு குயின்டன் டி காக் மற்றும் அக்னி சோப்ரா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டி காக் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி வந்த நிலையில், மறுபக்கம் அக்னி சோப்ரா 8 ரன்னிலும்,மொனாங்க் படேல் 20 ரன்னிலும், கேப்டன் நிக்கோலஸ் பூரன் 5 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.
அதேசமயம் மறுமுனையில் சிறப்பாக விளையாடி வந்த குயின்டன் டி காக் அரைசதம் கடந்து அசத்தினார். பின் 5 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 63 ரன்களில் டி காக் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களில் கீரென் பொல்லார்ட் 30 ரன்களையும், சன்னி படேல் 20 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் ரன்களைச் சேர்க்க தவறினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் எம்ஐ நியூயார்க் அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ரன்களைச் சேர்த்தது. யூனிகார்ன்ஸ் அணி தரப்பில் ஹாரிஸ் ராவுஃப், ஹசன் கான் மற்றும் கார்மி லெ ரூக்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.