எம்எல்சி 2025: மீண்டும் மிரட்டிய ஹெட்மையர்; ஹாட்ரிக் வெற்றியைப் பெற்றது சியாட்டில்!
சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிக்கு எதிரான எம்எல்சி லீக் போட்டியில் சியாட்டில் ஆர்காஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

எம்எல்சி 2025: ஷிம்ரான் ஹெட்மையரின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் நடப்பு மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் சியாட்டில் ஆர்காஸ் அணியானது தொடர்ச்சியாக மூன்றாவது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று நடைபெற்ற 22ஆவது லீக் போட்டியில் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் மற்றும் சியாட்டில் ஆர்காஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஃபுளோரிடாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்ய களமிரங்கிய யூனிகார்ன்ஸ் அணியில் கேப்டன் மேத்யூ ஷார்ட் 2 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் இணைந்த ஃபின் ஆலன் - ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர்.
இதில் ஃபின் ஆலன் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 23 ரன்னிலும், ஜேக் ஃபிரேசர்மெக்குர்க் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 35 ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களில் சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி 4 சிக்ஸர்களுடன் 41 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டிம் செஃபெர்ட் 31 ரன்களையும் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 168 ரன்களைச் சேர்த்தது. சியாட்டில் ஆர்காஸ் அணி தரப்பில் அயன் தேசாய் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய ஆர்காஸ் அணியில் ஸ்டீவன் டெய்லர் ரன்கள் ஏதுமின்றியும், கைல் மேயர்ஸ் 3 ரன்னிலும், கேப்டன் சிக்கந்தர் ரஸா 11 ரன்னிலும் என ஆட்டமிழந்தனர். இதையடுத்து ஜோடி சேர்ந்த ஷயான் ஜஹாங்கீர் - ஷிம்ரான் ஹெட்மையர் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் ஜஹாங்கீர் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 36 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஹென்ரிச் கிளாசென் 5 ரன்களுக்கும் விக்கெட்டை இழக்க, பின்னர் வந்த ஆரோன் ஜோன்ஸும் 14 ரன்களுடன் பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
Also Read: LIVE Cricket Score
ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுபக்கம் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த ஹெட்மையர் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்ததுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 4 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 78 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் சியாட்டில் ஆர்காஸ் அணி 19.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இப்போட்டியில் அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த ஷிம்ரான் ஹெட்மையர் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
Win Big, Make Your Cricket Tales Now