
எம்எல்சி 2025: டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் தோல்வியைத் தழுவியதன் மூலம் சியாட்டில் ஆர்காஸ் அணியின் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பானது கேள்விக்குறியாகியுள்ளது.
மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று நடைபெற்ற 28ஆவது லீக் போட்டியில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் மற்றும் சியாட்டில் ஆர்காஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஃபுளோரிடாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்த சூப்பர் கிங்ஸ் அணியில் சமித் படேல் 18 ரன்களுக்கும், சாய்தேஜா முக்காமல்லா ஒரு ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் இணைந்த கேப்டன் டூ பிளெசிஸ் மற்றும் ஷுபம் ரஞ்சனே இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர்.
இதில் அதிரடியாக விளையாடிய இருவரும் தஙகளின் அரைசதங்களை பூர்த்தி செய்ததுடன் 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். அதன்பின் தொடர்ந்து அபாரமாக விளையாடி வந்த ஃபாஃப் டூ ப்ளெசிஸ் 6 பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் 91 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் பெவிலியன் திரும்ப, மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரஞ்சனே 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 65 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்களைக் குவித்தது.