மொயின் அலி எந்த தொடரில் விளையாடுவார்? குழப்பத்தில் ரசிகர்கள்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் அறிமுகமாகவுள்ள சர்வதேச லீக் டி20 போட்டியில் மொயீன் அலி விளையாடுவாரா அல்லது தென் ஆப்பிரிக்காவில் அறிமுகமாகவுள்ள டி20 லீக் போட்டியில் சிஎஸ்கே ஜோஹன்னஸ்பர்க் அணிக்காக விளையாடுவாரா? என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
வரும் 2023 ஜனவரி மாதம் ஆறு அணிகள் பங்கேற்கும் புதிய டி20 லீக் போட்டியை சூப்பர் ஸ்போர்ட் நிறுவனத்துடன் இணைந்து தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் நடத்துகிறது. ஒரு மாதம் வரை நடைபெறவுள்ள இப்போட்டியில் 33 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு அணியிலும் 17 வீரர்கள் இடம்பெறுவார்கள். 12 வீரர்களை ஏலத்தின் வழியாகவும் 5 வீரர்களை நேரடியாகவும் அணிகள் தேர்வு செய்துகொள்ளலாம். இந்த டி20 லீக் போட்டிக்கான வீரர்கள் ஏலம் செப்டம்பர் 20 அன்று நடைபெறவுள்ளது.
தென் ஆப்பிரிக்க டி20 லீக் போட்டியில் பங்கேற்கும் ஆறு அணிகளையும் ஐபிஎல் உரிமையாளர்கள் விலைக்கு வாங்கியுள்ளார்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் - ஜோஹன்னஸ்பர்க் அணியையும் மும்பை இந்தியன்ஸ் - கேப் டவுன் அணியையும் சன் டிவியின் சன் ரைசர்ஸ் - போர்ட் எலிசபெத் அணியையும் லக்னெள - டர்பன் அணியையும் ராஜஸ்தான் ராயல்ஸ் - பார்ல் அணியையும் தில்லி கேபிடல்ஸ் அணியின் இணை உரிமையாளரான ஜிண்டால் செளத் வெஸ்ட் ஸ்போர்ட்ஸ் - பிரிடோரியா அணியையும் ஏலத்தில் விலைக்கு வாங்கியுள்ளன.
Trending
தென் ஆப்பிரிக்க நிறுவனங்கள் ஏலத்தில் போட்டியிட்டாலும் அதிக தொகையை முன்வைத்து ஐபிஎல் அணியின் உரிமையாளர்கள் தென் ஆப்பிரிக்க டி20 லீக் போட்டியின் அணிகளைப் பெற்றுள்ளார்கள். இப்போட்டியில் ஒவ்வொரு அணியிலும் நான்கு வெளிநாட்டு வீரர்கள் அனுமதிக்கப்படுவார்கள். சிஎஸ்கே அணி முதல்முறையாக வெளிநாட்டு லீக் போட்டியில் ஓர் அணியை விலைக்கு வாங்கியுள்ளது. தென் ஆப்பிரிக்க டி20 லீக் போட்டியின் தலைவராக முன்னாள் கேப்டன் கிரீம் ஸ்மித் செயல்படுவார்.
கேப் டவுன் அணியை விலைக்கு வாங்கியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம், எம்.ஐ. கேப் டவுன் என தனது அணிக்குப் பெயர் சூட்டியுள்ளது. அந்த அணி, தான் தேர்வு செய்துள்ள வீரர்கள் குறித்த அறிவிப்பைச் சமீபத்தில் வெளியிட்டது. ரஷித் கான், லிவிங்ஸ்டன், சாம் கரண், ரபாடா, பிரேவிஸ் என பிரபல டி20 வீரர்களை அந்த அணி தேர்வு செய்துள்ளது. மேலும் இந்த டி20 லீக்கின் விதிமுறைகளின்படி ஒவ்வொரு அணியும் ஏலத்துக்கு முன்பு மூன்று வெளிநாட்டு வீரர்கள், ஒரு தென் ஆப்பிரிக்க வீரர், சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத ஒரு தென் ஆப்பிரிக்க வீரர் என ஐந்து வீரர்களைத் தேர்வு செய்துகொள்ளலாம்.
ஜோஹன்னஸ்பர்க் அணியை வாங்கியுள்ள சிஎஸ்கே அணி, டு பிளெஸ்சிஸ், மொயீன் அலி, மஹீஸ் தீக்ஷனா, ரொமாரியோ ஷெப்பர்ட், ஜெரால்ட் கூட்ஸி ஆகிய வீரர்களைத் தேர்வு செய்துள்ளது. சிஎஸ்கேவின் பயிற்சியாளரான ஃபிளெமிங், ஜோஹன்னஸ்பர்க் அணியின் பயிற்சியாளராகவும் செயல்படவுள்ளார். எரிக் சிமன்ஸ் உதவிப் பயிற்சியாளராகத் தேர்வாகியுள்ளார்.
இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்த வருட ஜனவரி, பிப்ரவரியில் நடைபெறவுள்ள சர்வதேச டி20 லீக் போட்டியிலும் (ஐஎல்டி20) மொயீன் அலி விளையாடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொயீன் அலியை ஷார்ஜா வாரியர்ஸ் அணி தேர்வு செய்துள்ளது. மேலும் இங்கிலாந்து அணி, 2023 ஜனவரி இறுதியில் தென்னாப்பிரிக்காவில் 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடவுள்ளது. இதனால் மொயீன் அலி எந்த அணிக்காக ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் விளையாடுவார் என்கிற குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதுபற்றி ஒரு பேட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கூறுகையில், ஐஎல்டி20 போட்டியில் மொயீன் அலி விளையாடுவது பற்றி இப்போதுதான் தகவல் தெரிந்தது. அந்த வீரரிடம் இதுபற்றிய கருத்தை அறிய முயல்வோம் என்று கூறியுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரு புதிய டி20 லீக் போட்டி 2023 ஜனவரியில் தொடங்கப்படவுள்ளது. சர்வதேச லீக் டி20 என்கிற ஐஎல்டி20 போட்டியில் அதிகச் சம்பளம் தரப்படுவதால் அதில் இணைந்துகொள்ள பிரபல வீரர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். துபை, அபுதாபி, ஷார்ஜாவில் போட்டிகள் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now