
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஹைதராபாத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரின் ஆரம்பத்திலேயே முன்னிலைப் பெற்றுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் பிப்ரவரி 02ஆம் தேதி முதல் விசாகபட்டினத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இந்திய அணி சொந்த மண்ணில் முதல் போட்டியில் தோல்வியடைந்தது பல்வேறு விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது. அதிலும் குறிப்பாக இந்திய அணியின் பேட்டர்கள் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றனர். அதில் முக்கியமாக ஷுப்மன் கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயரின் ஃபார்ம் தொடர்ந்து விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது. இதில் தனது தொடக்க வீரர் இடத்தை விட்டு மூன்றாம் வரிசையில் களமிறங்கி வரும் ஷுப்மன் கில் தொடர்ந்து சொதப்பி வருகிறார்.
நடைபெற்று முடிந்த இந்த போட்டியில் கூட ஷுப்மன் கில் முதல் இன்னிங்ஸில் 23 ரன்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் ரன்கள் ஏதுமின்றியும் என விக்கெட்டை இழந்தது ஏமாற்றத்தைக் கொடுத்தார். மேலும் கடந்த 10 டெஸ்ட் போட்டிகளை எடுத்துக்கொண்டாலும் ஷுப்மன் கில்லின் பேட்டிங் ஃபார்ம் என்பது கேள்விக்குறியான ஒன்றாகவே உள்ளது. இந்நிலையில், ஷுப்மன் கில் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு தேவையான மாற்றங்களை தனது பேட்டிங்கில் செய்ய வேண்டும் என முன்னாள் வீரர் முகமது கைஃப் கூறியுள்ளார்.