
ரோகித் சர்மா இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு எதிர்பார்த்த அளவிற்கு, முக்கியமான போட்டிகளில் சரியாக முடிவுகளை இந்திய அணிக்கு சாதகமாக கொண்டு வர முடியவில்லை. 2022ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் அரையிருதியுடன் வெளியேறியது. அதற்கு முன்பு ஆசியக்கோப்பையிலும் தோல்வியை சந்தித்தது. கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியை சந்தித்து கோப்பையை இழந்தது.
இந்த வருடம் ஒருநாள் உலகக்கோப்பை வரவிருக்கிறது. அதில் ரோகித் சர்மா எப்படி செயல்படுவார்? அணியை வழிநடத்தி கோப்பையை வெல்வதற்கு வழிவகை செய்வாரா? என்கிற பல்வேறு சந்தேகங்களுடன் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்திய அணி கடைசியாக 2013ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. தோனி தலைமையிலான இந்திய அணி மூன்று வித ஐசிசி கோப்பைகளையும் பெற்றுக் கொடுத்து வெற்றிகரமான கேப்டனாக செயல்பட்டார்.
அவருக்குப் பிறகு வந்த விராத் கோலி மற்றும் தற்போது ரோகித் சர்மா இருவரும் கோப்பைகளை வென்று தர முடியாமல் தவிக்கின்றனர். இந்நிலையில் ரோஹித் சர்மா செய்யும் சிறிய தவறுகளை சரி செய்து கொண்டால் மகேந்திர சிங் தோனியை போல வெற்றிகரமான கேப்டனாகவும் வரலாம். மேலும் கோப்பைகளையும் பெற்று தரலாம் என்று முன்னாள் வீரர் முகமது கைஃப் கருத்து தெரிவித்துள்ளார்.