
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்துவரும் வங்கதேச அணி தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது நேற்று ராவல்பிண்டியில் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணியானது தொடக்கத்திலேயே சீரான இடைவேளையில் விக்கெட்டை இழந்து தடுமாறியது.
அதன்பின் இணைந்த அணியின் துணைக்கேப்டன் சௌத் ஷகீல் மற்றும் விக்கெட் கீப்பர் பெட்டர் முகமது ரிஸ்வான் இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினார். இருவரும் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் தங்கள் சதங்களையும் பதிவுசெய்து அசத்தினர். மேற்கொண்டு 5ஆவது விக்கெட்டிற்கு 240 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர்.
அதன்பின் 141 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சௌத் ஷகீல் தனது விக்கெடை இழந்தார். இருப்பினும் மறுபக்கம் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த முகமது ரிஸ்வான் 150 ரன்களைக் கடந்ததுடன், ஆட்டமிழக்காமல் 11 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 171 ரன்களைக் குவித்து அசத்தினார். இதன்மூலம் பாகிஸ்தான் அணியானது 446 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முதல் இன்னிங்ஸை டிக்ளர் செய்வதாக அறிவித்தது.