
இந்தியாவின் புகழ்பெற்ற உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் ஒன்று சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 தொடர். இத்தொடரின் நடப்பு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இதில் குரூப் ஏ பிரிவில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் பெங்கால் மற்றும் மத்திய பிரதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியின் முடிவில் மத்திய பிரதேச அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்கால் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
அதன்படி இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பெங்கால் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்களைச் சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கரண் லால் 44 ரன்களையும், ஷஃபாஸ் அஹ்மத் 37 ரன்களையும் சேர்த்தனர். இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய மத்திய பிரதேச அணியானது 19.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக ராஜத் பட்டிதார் 68 ரன்களையும், சுப்ரன்ஷு செனாபதி 50 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர்.
இந்நிலையில் இப்போட்டியில் பெங்கால் அணி தோல்வியைத் தழுவிய நிலையில், மேலும் ஒரு அதிர்ச்சியான தகவல் ஒன்றும் வெளியாகியுள்ளது. அதன்படி இப்போட்டியில் பெங்கால் அணிக்காக விளையாடிய இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மீண்டும் காயமடைந்துள்ள சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இப்போட்டியில் நான்கு ஓவர்களை வீசிய முகமது ஷமி 38 ரன்களைக் கொடுத்து ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை, மேலும் இப்போட்டியின் 19ஆவது ஓவரை ஷமி வீசிய நிலையில், முதுகுவலியால் பந்துவீச முடியாமல் தடுமாறினார்.