
எதிர்வரும் ஜூன் மாதம் முதல் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நடைபெற உள்ளது. மேற்கொண்டு இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக நடைபெறவுள்ள காரணத்தால் இதன் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
மேலும் இத்தொடருக்கான இந்திய அணியும் கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக செயல்பட்டு வாந்த ரோஹித் சர்மா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள நிலையில், அணியின் புதிய கேப்டன் யார் என்பது குறித்த விவாதங்கள் அதிகரித்துள்ளன. மேற்கொண்டு விராட் கோலியும் ஓய்வை அறிவிக்கவுள்ளதாகவும் சில தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதுதவிர்த்து இந்த டெஸ்ட் அணியில் எந்தெந்த வீரர்கள் இடம்பிடிப்பார்கள், நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு வரும் சாய் சுதர்ஷன் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா, ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷான் உள்ளிட்டோருக்கு இடம் கிடைக்குமா என்ற கேள்விகளும் அதிகரித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக காயத்தில் இருந்து மீண்டுள்ள முகமது ஷமி இந்த டெஸ்ட் தொடரில் இடம்பிடிப்பாரா என்ற கேள்வியும் ரசிகர் மத்தியில் எழுந்துள்ளது.