
இந்தியாவில் புகழ்பெற்ற உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் ஒன்று விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடர். இத்தொடரின் நடப்பு சீசனானது எதிர்வரும் டிசம்பர் 21ஆம் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு ஜனவரி 18ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது. மொத்தம் 38 அணிகள் பங்கேற்கும் இத்தொடரானது 5 குழுக்களாக பிரிக்கபட்டு போட்டிகள் நடத்தப்படவுள்ளது.
இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் அணிகளை மாநில கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வருகின்றனர். அந்தவகையில் நடப்பு சீசன் விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பெங்கால் அணி நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டது. இதில் அணியின் கேப்டனாக சுதீப் குமார் கராமி நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஷமி மற்றும் முகேஷ் குமார் ஆகியோரது பெயர்களும் இந்த அணியில் இடம்பிடித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் கோப்பி தொடருக்கான இந்திய அணிக்கு முகமது ஷமி அழைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், தற்போது அவர் விஜய் ஹசாரே கோப்பை தொடருக்கான பெங்கால் அணியில் இடம்பிடித்துள்ளதால் இனி அவர் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க மாட்டார் என்பது உறுதியாகியுள்ளதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.