
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய அணி தற்சமயம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இரு அணிகளும் தலா 230 ரன்களைச் சேர்த்து போட்டியை டையில் முடித்தனர். இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை கொழும்புவில் உள்ள ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது.
ஏற்கனெவே முதல் போட்டியில் இரு அணிகளும் வெற்றிகாக கடுமையாக போராடிய நிலையில் போட்டியில் டையில் முடிந்ததால், இத்தொடரானது தற்சமயம் சமநிலையில் உள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலை பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதற்காக இரு அணி வீரர்களும் தொடரில் முன்னிலை பெறுவதற்காக தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இதையடுத்து இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள வங்கதேச அணியானது இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இந்நிலையில் வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் முகமது ஷமி கம்பேக் கொடுப்பார் என தகவல்கள் வெளியாகின. ஏனெனில், கடந்தாண்டு இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் போது காயமடைந்த முகமது ஷமி அதன்பின் நடைபெற்ற எந்தவொரு சர்வதேச கிரிக்கெட் தொடர்களிலும் பங்கேற்காமல் இருந்தார்.