
இந்திய கிரிக்கெட் அணி, வரவிருக்கும் இங்கிலாந்து ஒருநாள் தொடர் மற்றும் 2025 சாம்பியன்ஸ் கோப்பை தொடரை நோக்கி தனது கவனத்தை செலுத்தி வருகிறது. அதிலும் இங்கிலாந்து ஒருநாள் தொடர் மற்றும் சம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் இடம்பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பும் ஆர்வமும் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அந்தவகையில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த காத்திருந்த முகமது ஷமி இங்கிலாந்து ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடிப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. முன்னதாக காயத்தினால் கடந்த ஓராண்டுக்கு மேலாக இந்திய அணியில் இடம்பிடிக்காமல் இருந்து வந்த ஷமி தற்சமயம் காயத்தில் இருந்து குணமடைந்து உள்ளூர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
இதனால் தற்சமயம் உடற்தகுதியுடன் இருக்கும் முகமது ஷமி மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிக்கவுள்ளது, இந்திய பந்துவீச்சு யூனிட்டிற்கு கூடுதல் பலத்தை வழங்கும். அதேசமயம் நடந்து முடிந்த பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் போது காயத்தை சந்தித்த ஜஸ்பிரித் பும்ரா தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை பெற்று வருகிறார். இருப்பினும் இத்தொடரில் அவர் பங்கேற்பாரா என்பது தற்போது வரை நிச்சயமற்றதாகவே உள்ளது.