
இந்தியாவில் நடைபெற்ற இரண்டாவது சீசன் மகளிர் பிரீமியர் லீக் தொடர் கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது. இதில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றிபெற்று அசத்தியதுடன், டபிள்யூபிஎல் தொடரில் முதல் முறையாக கோப்பையை வென்று சாதித்துள்ளது.
அதன்படி இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 113 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. டெல்லி அணி தரப்பில் அதிகபட்சமாக ஷஃபாலி வர்மா 44 ரன்களைச் சேர்த்தார். ஆர்சிபி அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஷ்ரேயங்கா பாட்டில் 4 விக்கெட்டுகளையும், சோஃபி மோலினக்ஸ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணி 19.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன் முதல் முறையாக கோப்பையை வென்று சாதித்து. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சோஃபி மோலினக்ஸ் ஆட்டநாயகி விருதையும், தொடர் முழுவதும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய தீப்தி சர்மா தொடர் நாயகி விருதையும் வென்றனர்.