
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஹைதராபாத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரின் ஆரம்பத்திலேயே முன்னிலைப் பெற்றுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் பிப்ரவரி 02ஆம் தேதி முதல் விசாகபட்டினத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், இங்கிலாந்து அணிக்கெதிரான முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்து நட்சத்திர வீரர் விராட் கோலி தனிப்பட்ட காரணங்களினால் விலகியது இந்திய அணிக்கு பெரும் பின்னடை ஏற்படுத்தியது. அதிலும் குறிப்பாக முதல் போட்டியில் அவர் இல்லாத வெற்றிடம் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இந்நிலையில், விராட் கோலி இப்போட்டியில் விளையாடியிருந்தால் இங்கிலாந்து வீரர்களுக்கு நிச்சயம் பதிலடி கொடுத்திருப்பார் என முன்னாள் வீரர் மாண்டி பனேசர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய பனேசர், விராட் கோலி இப்போட்டியில் விளையாடி இருந்தால் நிச்சயம் இங்கிலாந்து அணி வீரர்கள் முகத்திற்கு நேராக சென்று, ‘ஏய் நீ மீண்டும் அடித்து காட்டு; நீ எவ்வளவு நன்றாக விளையாடுகிறாய் என்று பார்ப்போம்’ என்று கூறியிருப்பார். இது தோல்வியைக் கண்டு பயம் கொள்ளாத இங்கிலாந்து அணி. அடுத்த நான்கு போட்டிகளிலும் அவர் தோல்வியைக் கண்டு பயம் கொள்ளாமல் தங்களது இயல்பான ஆட்டத்தையே வெளிப்படுத்துவார்கள்.