
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்த முறையாவது கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி மீண்டும் ஒருமுறை தோற்று ஏமாற்றியது. இதனையடுத்து தோல்விக்கான காரணங்கள் என பல்வேறு விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. குறிப்பாக தோனி போன்ற ஒரு கேப்டன் இன்னும் இந்திய அணிக்கு கிடைக்கவில்லை என்ற விவாதம் எழுந்து வருகிறது.
இந்நிலையில் இந்த விவாதத்திற்கு உயிர் கொடுக்கவுள்ளது பிசிசிஐ நிர்வாகம். அடுத்த டி20 உலகக்கோப்பை தொடருக்காக இந்திய அணியில் என்னென்ன மாற்றங்களை செய்யலாம் என்பதற்காக ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில் எம்எஸ் தோனியை இந்திய டி20 அணிக்குள் மீண்டும் கொண்டு வர ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த முறை ஆலோசகராக இல்லை.
பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டால் 3 வடிவ அணியையும் சமாளிப்பது கடினமாக உள்ளது. எனவே டி20 அணியின் இயக்குநராக தோனிக்கு நிரந்தர பதவி வழங்கவுள்ளனர். முழுவதும் ஓய்வு பெற்றவருக்கே நிரந்தர பதவிகள் கொடுக்கப்படும். அந்தவகையில் தோனியும் இந்தாண்டு ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்றுவிடுவார். எனவே இந்த பதவிக்காக தோனிக்கு அதிகாரப்பூர்வ கடிதமும் அனுப்பியுள்ளதாக தெரிகிறது. இதனை தோனி ஏற்றுக்கொள்வாரா அல்லது வேண்டாம் என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.