
இன்று டெல்லியில் உலக சாம்பியன் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி அவர்களை வீழ்த்தி எல்லோருக்கும் ஆச்சரியத்தை கொடுத்திருக்கிறது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி ஒரு பந்தை மீதம் வைத்து ஆல் அவுட் ஆகி 284 ரன்கள் சேர்ப்பது. அந்த அணியின் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் குர்பாஸ் அதிரடியாக 80 ரன்கள் சேர்த்தார்.
இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாட வந்த இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு ஆஃப்கானிஸ்தான் அணியின் ஒட்டுமொத்த பிரதான பந்துவீச்சாளர்களும் பெரிய நெருக்கடியை கொடுத்தார்கள். வேகப் பந்துவீச்சாளர்கள் பரூக்கி மற்றும் நவீன் உல் ஹக் இருவரும் பேர்ஸ்டோ மற்றும் கேப்டன் ஜோஸ் பட்லர் விக்கட்டை கைப்பற்றி கொடுத்தார்கள்.
இதற்கு அடுத்து மீதி இங்கிலாந்தின் எட்டு விக்கெட்களுக்கு, ஆஃப்கானிஸ்தான் அணியின் சுழற் பந்துவீச்சாளர்கள் முஜிப் உர் ரஹ்மான், ரஷித் கான் மற்றும் முகமது நபி மூவரும் பொறுப்பேற்றுக் கொண்டார்கள். பவர் பிளேவில் மிகச் சிறப்பாக பந்து வீசி ஜோ ரூட் விக்கெட்டை கைப்பற்றிய முஜிப், மீண்டும் திரும்பி வந்து சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த ஹாரி புரூக், கிறிஸ் வோக்ஸ் விக்கெட்டுகளை அதிரடியாக கைப்பற்றி கொடுத்து, ஆஃப்கானிஸ்தான அணியின் வரலாற்று வெற்றிக்கு கதவை திறந்து விட்டார்.