
ஐபிஎல் 17ஆவது சீசன் முதல் ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா தங்களின் கேப்டனாக செயல்படுவார் என்று மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது நிறைய ரசிகர்களிடம் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங் ஆகிய ஜாம்பவான்கள் தலைமையில் கூட 2008 – 2012 வரை மும்பை அணியால் ஒரு கோப்பையை கூட வெல்ல முடியவில்லை.
ஆனால் 2013இல் கேப்டனாக பொறுப்பேற்ற முதல் வருடத்திலேயே கோப்பையை வென்று கொடுத்த ரோஹித் சர்மா 2015, 2017, 2019, 2020 ஆகிய அடுத்த 7 வருடங்களில் மொத்தமாக 5 சாம்பியன் பட்டங்களை வென்று மும்பையை வெற்றிகரமான அணியாக சாதனை படைக்க வைத்தார். இதற்கிடையே 2013 சாம்பியன்ஸ் லீக் டி20 கிரிக்கெட் கோப்பையையும் வென்று கொடுத்த அவர் தற்போது இந்தியாவின் கேப்டனாகும் அளவுக்கு முன்னேறியுள்ளார்.
மேலும் 5 கோப்பைகளை வென்று கொடுத்ததால் சென்னைக்கு தோனியை போல மும்பையின் கேப்டனாக ரோஹித் சர்மா கடைசி வரை இருப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் வருங்காலத்தை கருத்தில் கொண்டு தற்போது பாண்டியா கேப்டனாக செயல்படுவார் என்று மும்பை அறிவித்ததால் அந்த அணியை லட்சக்கணக்கான ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் பின் தொடர்வதை நிறுத்தி எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.