
இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனுக்கான அதிகாரபூர்வ அட்டவணை நேற்று (பிப்ரவரி 16) வெளியிடப்பட்டது. அந்த வகையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. லீக் போட்டிகள் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி மே 18 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
அதைத்தொடர்ந்து பிளே ஆஃப் போட்டிகள் மே 20 ஆம் தேதி முதல் தொடங்கும் நிலையில் தொடரின் இறுதிப்போட்டி மே 25 ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இத்தொடரில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியானது மார்ச் 23ஆம் தேதி சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அதிர்ச்சியளிக்கும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சளர் ஜஸ்பிரித் பும்ரா முதுகில் ஏற்பட்ட காயத்தில் சிரமப்பட்டு வருகிறார். கடந்த பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியின் போது காயத்தை சந்தித்த பும்ரா, அதன்பின் தற்போது வரை சர்வதேச க்ளத்திற்கு திரும்பாமல் உள்ளார்.