காயம் காரணமாக டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய முஷ்ஃபிக்கூர்; வங்கதேச அணிக்கு பின்னடைவு!
விரலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக வங்கதேச அணியின் நட்சத்திர வீரர் முஷ்ஃபிக்கூர் ரஹிம் டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளார்.
இலங்கை அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இதில் டி20 தொடரை இலங்கை அணி கைப்பற்றிய நிலையில், ஒருநாள் தொடரை வங்கதேச அணி கைப்பற்றி பதிலடி கொடுத்தது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை மறுநாள் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இத்தொடருக்கான வங்கதேச அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இத்தொடருக்கான வங்கதேச அணியின் கேப்டனாக நஜ்முல் ஹொசைன் சாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த அணியில் அறிமுக வேகப்பந்து வீச்சாளரான நஹித் ராணாவுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான வங்கதேச அணியிலிருந்து அனுபவ வீரர் முஷ்ஃபிக்கூர் ரஹிம் காயம் காரணமாக விலகியுள்ளார்.
Trending
இலங்கை அணிக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியின்போது வலது கட்டை விரலில் காயம் அடைந்த அவருக்கு எக்ஸ்ரே மேற்கொண்டதில், எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இது குணமடைய 3 முதல் 4 வாரங்கள் ஆகும் என கூறப்படுகிறது. இதனால் அவர் இந்த டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இவரது விலகல் வங்கதேச அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
வங்கதேச டெஸ்ட் அணி: நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), ஸாகிர் ஹசன், மஹ்முதுல் ஹசன், ஷத்மான் இஸ்லாம், லிட்டன் தாஸ், மொமினுல் ஹக், முஷ்ஃபிக்கூர் ரஹீம், ஷஹாதத் ஹொசைன், மெஹிதி ஹசன் மிராஸ், நயீம் ஹசன், தைஜுல் இஸ்லாம், ஷோரிஃபுல் இஸ்லாம், சையத் கலீத் அகமது, முஷ்பிக் ஹசன், நஹித் ராணா.
Win Big, Make Your Cricket Tales Now