
இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணியுடனான 3 போட்டிகள் கொண்ட 50 ஓவர் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கனவே தொடரை கைப்பற்றிவிட்ட சூழலில் கடைசி போட்டி நாளை இந்தூரில் நடைபெறவுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த தொடரில் ரோஹித் சர்மா, சுப்மன் கில், முகமது சிராஜ் என பல வீரர்களும் சிறப்பாக விளையாடி வருகின்றனர். ஆனால் நட்சத்திர வீரரான விராட் கோலி மட்டும் ஜொலிக்க தவறியுள்ளார்.
கடந்த இலங்கை தொடரில் சதம் அடித்திருந்த அவர், தனது ஃபார்மை நியூசிலாந்தில் காட்டவில்லை. முதல் போட்டியில் 10 பந்துகளை சந்தித்து 8 ரன்களை மட்டுமே எடுத்து ஏமாற்றினார். 2ஆவது போட்டியில் 109 என்ற எளிய இலக்கை விரட்டிய போதும், 9 பந்துகளில் 11 ரன்களை மட்டுமே எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் இரண்டு முறையுமே மிட்செல் சாண்ட்னரிடம் தான் அவுட்டானார்.
இந்நிலையில் கோலிக்கு முன்னாள் வீரர் வசீம் ஜாஃபர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில், “நியூசிலாந்து தொடரில் விக்கெட்டான முறையை கண்டு கோலி நிச்சயம் வருத்தத்தில் இருப்பார். லெக் ஸ்பின்னர்களுக்கு எதிராக நீண்ட நாட்களாக அவர் தடுமாறி வருகிறார். இங்கிலாந்தில் அடில் ரஷித், ஆஸ்திரேலியாவில் ஆடம் சாம்பாவிடம் வீழ்ந்தார். தற்போது மிட்செல் சாண்ட்னருக்கு எதிராக தடுமாறுகிறார்.