
வங்கதேச அணியானது தற்சமயம் ஆஃப்கானிஸ்தான் அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடந்து முடிந்த முதலிரண்டு ஒருநாள் போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து, ஒருநாள் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்துள்ளன. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது போட்டி நாளை ஷார்ஜாவில் நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ, அந்த அணி தொடரை வெல்லும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இதனைத்தொடர்ந்து வங்கதேச அணியானது அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரிலும் விளையாடவுள்ளது.
இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடர் நவம்பர் 22ஆம் தேதியும், ஒருநாள் தொடரானது டிசம்பர் 8ஆம் தேதி முதலும் டி20 தொடரானது டிசம்பர் 15ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது. இந்நிலையில் குழந்தை பிறப்பின் காரணமாக எதிர்வரும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து வங்கதேச அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முஸ்தஃபிசூர் ரஹ்மான் விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.