
இலங்கை அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு ஒருநாள் போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தொடரில் சமனிலை வகிக்கின்றன. இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று சட்டோகிராமில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்து 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 235 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜனித் லியானகே 11 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 101 ரன்களைக் குவித்து அசத்தினார். வங்கதேச அணி தரப்பில் தஸ்கின் அஹ்மத் 3 விக்கெட்டுகளையும், முஸ்தஃபிசூர் ரஹ்மான், மெஹிதி ஹசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிவரும் வங்கதேச அணியில் அனாமுல் ஹக் 12 ரன்களுக்கும், நஜ்முல் ஹொசைன் சாண்டோ ஒரு ரன்னிலும் என விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டியுள்ளனர். அதன்பின் ஜோடி சேர்ந்துள்ள தன்ஸித் ஹசன் - தாவ்ஹித் ஹிரிடோய் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனால் வங்கதேச அணி 14 ஓவர்க்ள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 74 ரன்களைச் சேர்த்துள்ளது.