
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணியானது முதலில் அங்கு நடைபெற இருக்கும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. ஜூலை மாதம் இரண்டாம் வாரத்தில் தொடங்க இருக்கும் இந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை நேற்று பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்தது.
ரோஹித் சர்மா தலைமையிலான 16 பேர் கொண்ட இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் சீனியர் வீரர்களான புஜாரா மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக இளம் வீரர்களான யாஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், முகேஷ் குமார் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 21 வயதான இளம் வீரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் முதல் முறையாக இந்திய டெஸ்ட் அணிக்கு நேரடியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
உள்ளூர் கிரிக்கெட்டிலும், ஐபிஎல் கிரிக்கெட்டிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவரின் மீது நம்பிக்கை வைத்துள்ள இந்திய அணியின் கிரிக்கெட் நிர்வாகம் அவருக்கு இந்த வாய்ப்பினை வழங்கியுள்ளது. இந்நிலையில் முதல் முறையாக இந்திய அணியில் இருந்து அழைப்பு வந்தது மூலம் தனது வாழ்நாள் கனவு நிறைவேறி உள்ளதாக யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.