
Najmul Hossain Shanto Record: இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ இரண்டு இன்னிங்ஸிலும் சதமடித்து சாதனை படைத்துள்ளார்.
இலங்கை - வங்கதேசம் அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது கலே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 495 ரன்களையும், அதனைத்தொடர்ந்து இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 485 ரன்னிலும் ஆல் அவுட்டானது. பின்னர் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அணி 285 ரன்களைச் சேர்த்த நிலையில் டிக்ளர் செய்வதாக அறிவித்தது.
பின்னர் 295 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடி இலங்கை அணி ஐந்தாம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 72 ரன்களைச் சேர்த்தது. இதன் காரணமாக இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. மேலும் இப்போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதமடித்து அசத்திய வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ ஆட்டநாயகன் விருதை வென்றார்.