
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஒன்பதாவது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியானது சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. அதன்படி நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி கோப்பையை வென்றுள்ளது. மேலும் இப்போட்டியின் முடிவுக்கு பிறகு இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்து ரசிகர்களை சோகமடைய செய்தனர்.
இந்நிலையில் ரசிகர்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி கொடுக்கும் விசயமாக இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவிப்பாக இன்று அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “இதயம் நிறைந்த நன்றியுடன், டி20 சர்வதேசப் போட்டிகளில் இருந்து விடைபெறுகிறேன். உறுதியான குதிரை பெருமையுடன் துள்ளிக் குதிப்பது போல, நான் எப்போதும் என் நாட்டிற்காக என்னால் முடிந்ததைச் செய்து வருகிறேன். மற்ற வடிவங்களில் அதைத் தொடர்ந்து செய்வேன்.
டி20 உலகக் கோப்பையை வெல்வது எனக்கு மிகப்பெரும் ஒரு கனவாகும். அது தற்போஒது நனவானதில் பெரு மகிழ்ச்சி அடிக்கிறேன். இது எனது டி20 சர்வதேச வாழ்க்கையின் உச்சம். நினைவுகளுக்கும், வாழ்த்துகளுக்கும், தளராத ஆதரவுக்கும் நன்றி. ஜெய் ஹிந்த்” என்று பதிவிட்டுள்ளார். இந்நிலையில் ரவீந்திர ஜடேஜாவிற்கு பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகிறது. அந்தவகையில் தற்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜாவிற்கு தனது வாழ்த்து செய்தியை கூறியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.