
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய மும்பை அணிக்கு தொடக்க வீராங்கனைகளாக யாஸ்திகா பாட்டியா- ஹேலி மேத்யூஸ் களமிறங்கினர். இதில் யஷ்திகா பாட்டியா 15 ரன்னில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஹீலி மேத்யூஸுடன் ஜோடி சேர்ந்த நாட் ஸ்கைவர்-பிரண்ட் அதிரடியாக விளையாடினார். இப்போட்டியில்அதிரடியாக விளையாடிய இருவரும் அரை சதம் கடந்து அசத்தியதுடன், இரண்டாவது விக்கெட்டிற்கு 133 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர்.
அதன்பின் 10 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 77 ரன்களை எடுத்திருந்த நிலையில் ஹீலி மேத்யூஸும், 10 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 77 ரன்களை எடுத்த கையோடு நாட் ஸ்கைவர் பிரன்ட்டும் விக்கெட்டை இழக்க, ஆடுத்து களமிறங்கிய ஹர்மன்ப்ரீத் கவுரும் 12 பந்தில் 36 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 213 ரன்கள் எடுத்தது. குஜராத் ஜெயண்ட்ஸ் தரப்பில் அதிகபட்சமாக டேனியல் கிப்சன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.