
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் திராவிட்டின் பதவிக் காலம், அண்மையில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை 2024 தொடருடன் நிறைவடைந்தது. இதனையடுத்து இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளரைத் தேடும் முயற்சியில் பிசிசிஐ இறங்கியது. இதில் முதலில் ரிக்கி பாண்டிங், ஜஸ்டின் லங்கர், ஸ்டீபன் ஃபிளெமிங் உள்ளிட்டோரது பெயர்கள் இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளருக்கான போட்டியில் இருந்தது. அவர்களுடன் இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீரின் பெயர் முன்னிலையில் இருந்தது.
இந்நிலையில் இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா சமீபத்தில் அதிகாராப்பூவர்மாக அறிவித்தார். மேற்கொண்டு எதிர்வரவுள்ள இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் இந்திய அணி விளையாடவுள்ள நிலையில், அத்தொடரில் இருந்த கௌதம் கம்பீரின் பயிற்சியாளர் பதவியும் தொடங்கவுள்ளதாக பிசிசிஐ தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு இத்தொடருக்கான இந்திய அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டு பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.
அதேசமயம் இந்திய அணியின் மற்ற பயிற்சியாளர்கள் குறித்து இன்னும் எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை என்பதும் அணியில் நீடிக்கும் குழப்பத்தை அதிகரித்து வருகிறது. ஏனெனில் இந்திய அணியின் புதிய பேட்டிங், பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங் பயிற்சியாளர்கள் யார் என்பதை தேர்வு செய்வதில் புதிய பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் பிசிசிஐ இடையே முரன்பாடுகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏனெனில் கௌதம் கம்பீர் தன்னுடன் கேகேஆர் மற்றும் லக்னோ அணியில் இணைந்து பணியாற்றிய வீரர்களை பயிற்சியாளர்களாக நியமிக்கும் படி வலிவுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.