இங்கிலாந்து அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு போட்டியிலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றும் 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது. இதனையடுத்து நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று வெலிங்டனில் உள்ள ஸ்கை கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணியில் ஜேமி ஸ்மித், பென் டக்கெட், ஜோ ரூட், கேப்டன் ஹாரி ப்ரூக், ஜேக்கப் பெத்தெல், சாம் கரண் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். மேற்கொண்டு நிதானமாக விளையாடி வந்த ஜோஸ் பட்லர் 38 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த ஜேமி ஓவர்ட் - பிரைடன் கார்ஸ் இணை சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜேமி ஓவர்டன் தனது அரைசதத்தைப் பதிவு செய்து அசத்தினார்.
பின்னர் ஒரு பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் 36 ரன்களைச் சேர்த்த நிலையில் பிரைடன் கார்ஸ் ஆட்டமிழக்க, ஜேமி ஓவர்டன் 10 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 68 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். மேற்கொண்டு களமிறங்கிய ஜோஃப்ரா ஆர்ச்சரும் 16 ரன்களுடன் நடையைக் கட்டினார். இதன் காரணமாக இங்கிலாந்து அணி 40.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 222 ரன்களை சேர்த்து ஆல் அவுட்டானது. நியூசிலாந்து தரப்பில் பிளைர் டிக்னர் 4 விக்கெட்டுகளையும், ஜேக்கப் டஃபி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.