முத்தரப்பு டி20 தொடர்: ராபின்சன், ஜேக்கப் டஃபி அசத்தல்; தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது நியூசிலாந்து!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முத்தரப்பு டி20 லீக் போட்டியில் நியூசிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

Zimbabwe T20i Tri-Series: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முத்தரப்பு டி20 தொடரின் லீக் போட்டியில் நியூசிலாந்து அணி வீரர் டிம் ராபின்சன் அரைசதம் கடந்து அசத்தியதுடன் அணியின் வெற்றிக்கும் முக்கிய பங்காற்றியதன் மூலம் ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.
தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகள் தற்சமயம் ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த அணிக்கு எதிராக முத்தரப்பு டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் ஜிம்பாப்வேவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது. இந்நிலையில் இத்தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில் நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு டிம் செஃபெர்ட் - டெவான் கான்வே இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியாக தொடங்கிய டிம் செஃபெர்ட் 22 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, டெவான் கான்வே 9 ரன்களுடன் நடையைக் கட்டினார். அதன்பின் களமிறங்கிய டேரில் மிட்செல் 5 ரன்களிலும், மிட்செல் ஹெய் 2 ரன்னிலும், ஜேம்ஸ் நீஷம் ரன்கள் ஏதுமின்றியும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் அந்த அணி 70 ரன்களில் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது ஜோடி சேர்ந்த டிம் ராபின்சன் - பெவான் ஜேகப்ஸ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய டிம் ராபின்சன் தனது அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினார். மேற்கொண்டு இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டிம் ராபின்சன் 6 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 75 ரன்களையும், பெவான் ஜேக்கப்ஸ் ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 44 ரன்களையும் சேர்த்ததுடன் 6ஆவது விக்கெட்டிற்கு 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்களைச் சேர்த்தது. தென் ஆப்பிரிக்க தரப்பில் குவேனா மபாகா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்க அணிக்கு லுவான் ட்ரே பிரிட்டோரியஸ் - ரீஸா ஹென்றிக்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து 34 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் பிரிட்டோரியஸ் 27 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ருபின் ஹர்மான் ஒரு ரன்னிலும், மற்றொரு தொடக்க வீரர் ரீஸா ஹென்றிக்ஸ் 16 ரன்னிலும், சேனுரன் முத்துசாமி 7 ரன்னிலும், கேப்டன் ரஸ்ஸி வேண்டர் டுசென் 6 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, தென் ஆப்பிரிக்க அணி 62 ரன்களில் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதன்பின் களமிறங்கிய டெவால்ட் பிரீவிஸ் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார். ஒரு கட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி எளிதாக இலக்கை எட்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 35 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கார்பின் போஷும் 8 ரன்களுடன் நடையைக் கட்டினார். மேற்கொண்டு ஜார்ஜ் லிண்டேவும் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 30 ரன்களில் ஆட்டமிழக்க, அணியின் கடைசி நம்பிக்கையாக பார்க்கப்பட்ட ஜெரால்ட் கோட்ஸியும் 17 ரன்களுடன் பெவிலியனுக்கு திரும்பினார்.
Also Read: LIVE Cricket Score
இதன் காரணமாக தென் ஆப்பிரிக்க அணி 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 152 ரன்களில் ஆல் அவுட்டானது. நியூசிலாந்து அணி தரப்பில் மேட் ஹென்றி மற்றும் ஜேக்கப் டஃபி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், இஷ் சோதி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். இதன்மூலம் நியூசிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இப்போட்டியில் அரைசதம் கடந்து அணியின் வெற்றிக்கு உதவிய நியூசிலாந்தின் டிம் ராபின்சன் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
Win Big, Make Your Cricket Tales Now