
நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது நாளை மறுநாள் அக்டோபர் 16ஆம் தேதி பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கவுள்ளது.
மேற்கொண்டு இத்தொடரில் பங்கேற்கும் டாம் லேதம் தலைமையிலான நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்தியா அணியை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. அதன்படி ரோஹித் சர்மா தலைமையிலான இந்த இந்திய டெஸ்ட் அணியின் துணைக்கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேசமயம் வங்கதேச டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்த யாஷ் தயாளிற்கு இந்த அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதுதவிர வங்கதேச டெஸ்ட் தொடரில் விளையாடிய மற்ற அனைத்து வீரர்கள் தங்கள் இடங்களை தக்கவைத்துள்ளனர். இதனையடுத்து முதல் டெஸ்ட் போட்டிக்காக இரு அணி வீரர்களும் திவீர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.