
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த நடப்பு சீசன் மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து அணியானது முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.
அதேசமயம் இத்தொடரில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணியானது 4 லீக் போட்டிகளில் இரண்டு வெற்றி, 2 தோல்விகளைச் சந்தித்து அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. அதிலும் குறிப்பாக தங்களது முதல் லீக் போட்டியில் நியூசிலாந்து அணியுடன்ம் கடைசி லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியிடமும் என இந்திய அணி தோல்வியைத் தழுவியதன் கரணமாக லீக் சுற்றுடனே வெளியேறி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்நிலையில் இந்திய மகளிர் அணியானது அடுத்ததாக சொந்த மண்ணில் நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிரான மூன்று போட்டிகளை உள்ளடக்கிய ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இத்தொடரானது அக்.24ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. மேற்கொண்டு இத்தொடரின் அனைத்து ஒருநாள் போட்டிகளும் அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் மட்டுமே நடைபெறவுள்ளது.