
கரீபியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற மூன்றாவது லீக் போட்டியில் செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் மற்றும் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த நைட் ரைடர்ஸ் அணியானது பூரன் மற்றும் கேசி கார்டி ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 250 ரன்களைக் குவித்தது.
இதில் அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரன் 97 ரன்களையும், கேசி கார்டி 73 ரன்களையும் சேர்த்தனர். பேட்ரியாட்ஸ் அணி தரப்பில் ஆன்ரிச் நோர்ட்ஜே 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பேட்ரியாட்ஸ் அணியில் மைக்கேல் லூயிஸ் 56 ரன்களையும், எவின் லூயிஸ் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோர் தலா 39 ரன்களையும் சேர்த்தனர்.
ஆனால் அவர்களைத் தவிர்த்து மற்ற வீரர்கள் யாரும் சோபிக்காத காரணத்தால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியானது 44 ரன்கள் வித்தியாசத்தில் செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. மேலும் இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய நிக்கோலஸ் பூரன் ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.