
ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற 40ஆவது மற்றும் கடைசி லீக் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியில் தொடக்க வீரர் பிரெண்டன் கிங் 7 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் இணைந்த ஜான்சன் சார்லஸ் - நிக்கோலஸ் பூரன் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் இரண்டாவது விக்கெட்டிற்கு 80 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர்.
இதில் ஜான்சன் சார்லஸ் 43 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த நிக்கோலஸ் பூரன் 53 பந்துகளில் 6 பவுண்டரி, 8 சிக்சர்கள் என 98 ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அவருக்கு துணையாக விளையாடிய ஷாய் ஹோப் மற்றும் கேப்டன் பொவெல் முறையே 25 மற்றும் 26 ரன்களை அடித்தனர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 218 ரன்களை குவித்தது. ஆஃப்கானிஸ்தான் தரப்பில் குலாப்தின் நயிப் விக்கெட்டுகளையும், ஒமர்சாய் மற்றும் நவீன் உல் ஹக் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
அதன்பின் கடின இலக்கை துரத்திய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் அதிரடி தொடக்க வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸ் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய இப்ராகிம் 38 ரன்களை சேர்த்தார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் அந்த அணி ரன் குவிக்க முடியாமல் திணறியது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் அபார பந்துவீச்சு காரணமாக ஆப்கானிஸ்தான் அணி 16.2 ஓவர்களில் 114 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.