
கிரிக்கெட்டில் கடந்த காலங்களில் வீரர்களின் பணிச் சுமை மற்றும் மனச்சுமை குறித்தான எந்த விழிப்புணர்வும் இல்லாமல் இருந்தது. மேலும் கிரிக்கெட் ரசிகர்கள் இடையேயும் கிரிக்கெட் வீரர்களின் இந்தப் பிரச்சனைகள் குறித்தான புரிதல் எதுவும் இருந்ததில்லை. நிறைய பணம் சம்பாதிக்கிறார்கள் விளையாடுவதில் என்ன பிரச்சனை என்பதாகத்தான் நினைத்தார்கள்.
முதன் முதலில் ஆஸ்திரேலியா அணியின் மேக்ஸ்வெல் தனக்கு மனம் மிகவும் வெறுமையாக இருப்பதாகவும், தொடர்ந்து கிரிக்கெட் அணி உடனே இருந்து இப்படி ஆகிவிட்டதாகவும், அதனால் தனக்கு கால வரையற்ற ஓய்வு தேவை என கேட்டு, ஆஸ்திரேலியா அணியை விட்டு வெளியேறினார். இந்த நிகழ்வு கிரிக்கெட் வட்டாரத்தில் வீரர்களின் பணிச்சுமை மற்றும் மனச்சுமை குறித்தான விவாதங்களை டொடங்கியது.
இதற்கடுத்து இங்கிலாந்து அணியின் தற்போதைய டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இதே மாதிரியான காரணங்களுக்கு காலவரையற்ற ஓய்வில் சென்றார். அதன்பின் 2022 ஆம் ஆண்டு ஆசியக் கோப்பை தொடருக்கு முன்பாக விராட் கோலி ஒரு மாத ஓய்வில் சென்றார். பின்பு திரும்பி வந்து இரண்டரை வருடங்கள் சதம் அடிக்க முடியாமல் இருந்ததற்கு ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிராக முற்றுப்புள்ளி வைத்தார்.