
இங்கிலாந்து அணி தற்சமயம் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து நியூசிலாந்தை பேட்டிங் செய்யுமாறும் அழைத்தது.
இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணியில் டெவான் கான்வே 2 ரன்னில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டாம் லேதம் 47 ரன்களுக்கும், 33 ரன்னில் ரச்சின் ரவீந்திராவும், 19 ரன்னி டேரில் மிட்செலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதற்கு மத்தியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேன் வில்லியம்சன் சதம்டிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 93 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.பின்னர் ஜோடி சேர்ந்த டாம் பிளெண்டர் - கிளென் பிலீப்ஸ் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இதில் கிளென் பிலீப்ஸ் அதிரடியாக விளையாட, மறுபக்கம் டாம் பிளெண்டல் 17 ரன்களுக்கும், அடுத்து களமிறங்கிய அறிமுக வீரர் நாதன் ஸ்மித் 3 ரன்களிலும், மேட் ஹென்றி 18 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் முதல்நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 319 ரன்களைக் குவித்தது. இந்நிலையில் இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்திலும் சிறப்பாக விளையாடிய கிளென் பிலீப்ஸ் தனது அரைசதத்தை பதிவுசெய்து அசத்தியதுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 58 ரன்களைச் சேர்த்தார்.