இங்கிலாந்து அணி தற்சமயம் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று வெல்லிங்டனில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஸாக் கிரௌலி - பென் டக்கெட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பென் டக்கெட் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து ஸாக் கிரௌலி 17 ரன்னிலும், ஜோ ரூட் 3 ரன்னிலும், ஜேக்கப் பெத்தேல் 16 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். இதனால் இங்கிலாந்து அணி 43 ரன்னிலேயே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் இணைந்த ஹாரி புரூக் மற்றும் ஒல்லி போப் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இருவரும் தங்களின் அரைசதங்களை பதிவுசெய்ததுடன், இருவரும் இணைந்து 5ஆவது விக்கெட்டிற்கு 150 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். பின் 66 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஒல்லி போப் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் பென் ஸ்டோக்ஸும் 2 ரன்னுடன் நடையைக் கட்டினார். அதேசமயம் மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹாரி புரூக் தனது சதத்தைப் பதிவுசெய்து அசத்திய நிலையில், 11 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் என 123 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் ரன் அவுட் முறையில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார்.