நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 டி20, 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது இன்று முதல் தொடங்கியது. இதில், நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று ஆக்லாந்தில் ஊள்ள ஈடன் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற நிலையில், இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் மிட்செல் சாண்ட்னர் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. அணியின் தொடக்க வீரர்கள் பிராண்டன் கிங் 3 ரன்னிலும், அலிக் அதனாஸ் 16 ரன்னிலும், அகீம் அகஸ்டே 2 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் ஷாய் ஹோப் - ரோஸ்டன் சேஸ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷாய் ஹோப் அரைசதம் கடந்து அசத்தியதுடன், 4 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 53 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் ரோஸ்டன் சேஸ் 28 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பின்னர் களமிறங்கிய ரோவ்மன் பாவெல் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 33 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். இறுதியில் ரொமாரியோ ஷெஃபெர்ட் 9 ரன்களையும், ஜேசன் ஹோல்டர் 5 ரன்களையும் சேர்த்தனர். இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களை மட்டுமே சேர்த்தது. நியூசிலாந்து அணி தரப்பில் ஜேக்கப் டஃபி மற்றும் ஸக்காரி ஃபால்க்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.