
இலங்கை மகளிர் அணி தற்சமயம் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது.
இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது இன்று (மார்ச் 14) தொடங்கியது. அதன்படி கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லி ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற நியூசிலாந்து - இலங்கை மகளிர் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு கேப்டன் சூஸி பேட்ஸ் மற்றும் ஜார்ஜியா பிலிம்மர் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஜார்ஜியா 2 ரன்கள் மட்டுமெ எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் பேட்ஸுடன் இணைந்த எம்மா மெக்லெட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் உயர்ந்தது. பின் 21 ரன்கள் எடுத்த நிலையில் சூசி பேட்ஸ் ஆட்டமிழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட எம்மா மெக்லெட்டும் 44 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய வீராங்கனைகளும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, நியூசிலாந்து மகளிர் அணி 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 101 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இலங்கை தரப்பில் மல்கி மதரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.