
இலங்கை, இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடரானது இலங்கையில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 5ஆவது லீக் போட்டியில் இந்திய மகளிர் மற்றும் தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
கொழும்புவில் உள்ள ஆர்.பிரமதாசா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இந்திய மகளிர் அணிக்கு பிரதிகா ரவால் மற்றும் ஸ்மிருதி மந்தனா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பிரதிகா ராவல் ஒரு ரன்னில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஹர்லீன் தியோல் 4 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தார். மேற்கொண்டு களமிறங்கிய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரும் 28 ரன்களை மட்டுமே எடுத்திருந்த கையோடு விக்கெட்டை இழந்தார்.
இதனால் இந்திய மகளிர் அணி 50 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் ஸ்மிருதி மந்தனாவுடன் ஜோடி சேர்ந்த ஜெமிமா ரோட்ரிஸுகும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்து அசத்தியதுடன் 4ஆவது விக்கெட்டிற்கு 80 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதன்பின் 6 பவுண்டரிகளுடன் 51 ரன்களைச் சேர்த்த கையோடு ஸ்மிருதி மந்தனா விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய தீப்தி சர்மாவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.